Current Affairs for all exams Current Affairs for all exams - examsguide.lk

 Current Affairs for all exams




ஆபிரிக்க முகமூடி

 பிரான்ஸில் ஏலம்

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்திய ஆபிரிக்காவின் முகமூடி ஒன்று பிரான்ஸில் 4.2 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த முகமூடியை திரும்பத் தரும்படி கபோன் அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையிலேயே கடந்த சனிக்கிழமை இந்த ஏலம் இடம்பெற்றது. மிக அரிதான மரப்பலகையால் செதுக்கப்பட்ட “நிகில்” என்ற இந்த முகமூடி கபோனின் பங் இன மக்கள் தமது சடங்குகளில் பயன்படுத்தி வந்ததாகும். தெற்கு பிரான்ஸ் நகரான மொன்டபில்லியல் நகரில் இடம்பெற்ற ஏலத்தில் 300,000 தொடக்கம் 400,000 யூரோவுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக விலை போனது. 2006 ஆம் ஆண்டு பாரிஸில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் இது போன்ற ஒரு முகமூடி 2.09 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.

சங்கமித்தை
பௌத்த மதத்தை இலங்கைக்கு அறிமுகம் செய்து வெள்ளரசு மரக்கன்றையும் கொண்டு வந்தவர் சங்கமித்தை. 

54 வருடங்களுக்குப் பின் மீண்டும்: சர்வதேச விமான நிலையமாக இரத்மலானை விமான நிலையம்

இரத்மலானை விமான நிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 54 வருடங்களுக்குப் பின்பு இரத்மலானை விமான நிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் இரத்மலானை க்கான முதலாவது விமானம் நேற்று மாலை தீவிலிருந்து வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இரத்மலானை விமான நிலையம் 54 வருடங்களுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு,கொழும்பு சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ, சிவில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கா, ஸ்ரீலங்கா விமானநிலைய அதிகார சபையின் தலைவர்,மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிரி, மாலைதீவு சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அகமட் சுகைல், இரு நாடுகளுக்குமான உயர் ஸ்தானிகர்கள், இலங்கை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மாலைதீவு எயார் விமான நிலைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்ப தினத்தன்றே (27), காலை ஒன்பது மணியளவில் மாலைதீவு எயா விமானம் ஐம்பது பிரயாணிகளை ஏற்றியவாறு கொழும்பு விமான நிலையமான இரத்மலானையை வந்தடைந்தது.இதில்,

மாலைதீவின் சிவில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அகமட் சுகைல் மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகர் எம். சாதிக் உட்பட அதிதிகள் பலரும் வந்திருந்தனர். இலங்கை -மாலைதீவு விமானப் போக்குவரத்து சம்பந்தமான ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

இவ்விமான சேவைக்கான டிக்கற்றுக்களை நவலோக்க விமான ரவல்ஸ் சேவை நிறுவனம் வழங்குகின்றது. மாலைதீவு சிவில போக்குவரத்து அமைச்சர் அப்துல் சுகைல் இங்கு உரையாற்றுகையில்,

மாலைதீவு நாட்டவர்களது இரண்டாவது வதிவிடமாக களுபோவில, தெஹிவளை கல்கிசை பிரதேசங்கள் உள்ளன. இங்கு சுமார் 12ஆயிரம் மாலைதீவு மக்கள் வாழ்கின்றனர்.

முஸ்லிம்களது புனித நோன்பு ஆரம்பமாவதால் அனேகமான மாலைதீவினர்கள் தமது நாட்டுக்குச் சென்றுள்ளனர். ரமலான் நோன்பின் பின்னர் வாரத்தில் இரண்டு அல்லது 3 முறையாவது இவ்விமான சேவைகள் நடைபெறும் எனக் கூறினார். அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ உரையாற்றுகையில்

இரத்மலானை விமான நிலையம் கடந்த 54 வருடங்களுக்கு பிறகு தேசிய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தெஹிவளை, கல்கிசை, நுகேகொடைப் பகுதியில் கல்வி பயில்வதற்காகவும், சுற்றுலாத்துறை, வைத்தியம் ஆகியவற்றுக்காகவும் 12 ஆயிரம் மாலைதீவு மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் நாளாந்தம் தமது நாட்டுக்கு பிரயாணங்களை மேற்கொள்வதற்கும், எதிர்காலத்தில் இந்தியா போன்ற நாடுகளின் சிறிய விமானங்கள் வந்து இறங்குவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

கொவிட் நோய் காரணமாக சகல விமான நிலையங்களும் மூடி வைக்கப்பட்டன. அந் நிலையில் பொருளாதாரத்தில் இலங்கை பின்னடைவு அடைந்தாலும், இன்று இவ்விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதையிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் 5துஉச்சி மாநாடு 

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவுக்கான முன்னெடுப்பு’ (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation_- BIMSTEC) அங்கத்துவ நாடுகளின் செயலாளர்கள் மாநாடு March  28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகியது. அதேவேளை ‘பிம்ஸ்டெக்’ உச்சிமாநாடு March 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது

பிம்ஸ்டெக் அமைப்பின் தற்போதைய தலைமைப் பதவியை இலங்கை ஏற்கிறது. எனவே இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆவார். எனவே இம்மாநாட்டை இலங்கை இம்முறை நடத்துகிறது. வங்காள விரிகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாட்டில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த 05 ஆவது உச்சிமாநாடு உலகளாவிய கொவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக உரிய வேளையில் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இவ்வருடம் இதனை நடத்த இலங்கை இணக்கம் தெரிவித்திருந்தது.


பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் இராஜதந்திர பயிற்சி அல்லது கல்வி நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி, போக்குவரத்து இணைப்புக்கான திட்டம் உள்ளிட்ட ஆவணங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கைச்சாத்திடப்படவுள்ளன.

'பிம்ஸ்டெக் -மீள்திறன் கொண்ட பிராந்தியம், வளமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான மக்களை நோக்கி' என்பது 5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

பிம்ஸ்டெக் அல்லது ‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு’ என்பது தென்கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகளை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்த அமைப்பில் இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, மியன்மார், தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன. இவை அனைத்தும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளாகும்.

இந்த அமைப்பின் நிரந்தர செயலகம் டாக்காவில் அமைந்துள்ளது. கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி செய்வது மற்றும் பயிற்சியளிப்பது, கூட்டுறவை வளர்ப்பதும் இதன் நோக்கமாகும். இந்த நாடுகளின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு, சமூக, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் ஒவ்வொரு நாடும் மற்றவற்றுக்கு உதவி செய்து எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்பதும் இதன் நோக்கம்.

பிம்ஸ்டெக் அமைப்பு, உலக சனத்தொகையில் 22 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்திய போதும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் மட்டுமே இவ்வமைப்பு பங்களிப்புச் செய்கிறது. எனவே, பிராந்தியத்தின் சவால்களை வெற்றி கொள்வதற்காக, உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை சிறந்த முறையில் பேணவும், பகிர்ந்த முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், உறுப்பு நாடுகளை பலமாக ஊக்குவிப்பதாக இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


மாநாட்டில் இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இன்றும் நாளையும் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பங்குபற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் மியன்மார் வெளிநாட்டமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாக பங்கேற்கவுள்ளார்.


பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் 03 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்துஅமைச்சர்கள் ஜீ. எல் பீரிஸ், அலி சப்ரி உடன்படிக்கையில் கையொப்பம்


பிம்ஸ்டெக் அரச தலைவர்களின் மாநாட்டில்  மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

ஒப்பந்தங்களில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் திருமதி தீபா லியனகே ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

குற்றவியல் விவகாரத்தில் பரஸ்பர சட்ட உதவிக்கான பிம்ஸ்டெக் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நீதியமைச்சர் அலி சப்ரியும் உறுப்பு நாடுகளின் இராஜதந்திர பயிற்சி நிறுவனங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸும் தொழில்நுட்ப பரிமாற்ற வசதியை ஸ்தாபித்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழிற் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் தீபா லியனகேயும் கைச்சாத்திட்டனர்.

பிம்ஸ்டெக் அரச தலைவர்களின் மாநாடு நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் போது ஜனாதிபதி தலைமை உரையாற்றியதுடன் பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பம் மூலம் மாநாட்டில் உரையாற்றினர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி:

பிம்ஸ்டெக் மாநாடு ஒரு முக்கியமான மைல் கல்லை சந்தித்துள்ளது. இது அதற்கான பொற்காலமாகும்.

பிராந்தியங்களுக்கு இடையிலான எமது தனித்துவமான வர்த்தக நடவடிக்கைகள், மற்றும் ஆரம்ப வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம்.

பிம்ஸ்டெக் அமைப்பு செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் இந்தியா ஒரு மில்லியன் டொலர் அமெரிக்க டொலர்களை வழங்கும்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸினா:

ஐந்தாவது தடவையாக பிம்ஸ்டெக் மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. நாடுகளுக்கிடையில் சகவாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த நாடுகளிலுள்ள மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கும் இது நடவடிக்கை எடுக்கும்.

கொவிட்-19 தொற்றுக்கு முகம்கொடுத்துள்ள உலக நாடுகளில் உணவு விநியோகத்துக்குத் தடையேற்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதற்கு கொரோனா தொற்று காரணமாகியுள்ளது. சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து நாம் அங்கத்துவ நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம். இந்த மாநாடானது பிராந்திய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பூட்டான் பிரதமர் லோடே செரின்...

பிம்ஸ்டெக் மாநாட்டை சாத்தியமாக்குவதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நாம் பாராட்டுகின்றோம். தேசிய. பிராந்திய மற்றும் உலக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ள நாம், ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

எமது பிராந்தியத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இம்மாநாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். பூட்டானில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு மன்னரின் அர்ப்பணிப்புள்ள நடவடிக்கைகள் பெரிதும் உதவின.

மியன்மார் வெளிநாட்டமைச்சர்

முன்னா முன்விலின்,

எமது பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பிராந்திய நாடுகளின் ஒனறிணைந்த செயற்பாடுகள் அவசியமாகும். எமது நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியாவும், தாய்லாந்தும் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. அதற்கு இந்த மாநாட்டின் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அங்கத்துவ நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பைப் பலப்படுத்திக்கொள்வதற்கு இது மிக சிறந்த தருணமாகும்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டேவூபா,

எமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு இத்தகைய மாநாடுகள் அவசியமாகின்றன. சிறந்த சிந்தனைகள் மூலம் சவால்களை வெற்றிகொள்ள முடியும். சாத்தியப்பாடுகளை எட்டுவதற்கு பேச்சுவார்ததைகள் மிக முக்கியமானதாகும்.

பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைவர் பதவி தாய்லாந்துப் பிரதமர் ஜெனரல் ப்ரையுன் சான் ஓ வா விடம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவால் ஒப்படைக்கப்பட்டது.

தலைமைப் பதவியைப் பொறுப்பேற்று உரையாற்றிய அவர், உலகில் அரசியல் பொருளாதார வீழ்ச்சி நிலையை தற்போது காணமுடிகிறது. கொரொனா சூழ்நிலை காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது. பிம்ஸ்டெக் மாநாட்டின் மூலம் சவால்களை ஒன்றணைந்து எதிர்கொள்ள நாடுகளுக்கிடையில் காத்திரமான கலந்துரையாடல்கள் அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்


யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் 


இலங்கை இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவியில் அமைக்கப்பட்ட, யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம்  எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் ஒரு மணியளவில் காணொளி முறையில், இது திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் மதகுருமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையம், வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

ஒஸ்கார்: தொகுப்பாளரின் முகத்தில் அறைந்த ஸ்மித்

ஒஸ்கார் விருது நிகழ்ச்சியில் நடிகர் வில் ஸ்மித், தனது மனைவியின் தோற்றத்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிறிஸ் ரோக்கை முகத்தில் அறைந்தார்.

விருது பெற முன்மொழியப்பட்ட நடிகர்கள் சிலரை ரோக் நகைச்சுவையாகக் கிண்டல் செய்துகொண்டிருந்தார்.

அப்போது ஸ்மித்தின் மனைவி, ஜேடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்தும் நகைச்சுவையாக பேசினார் ரோக். அவர் அவ்வாறு நகைச்சுவையாகக் கூறியதும் ஸ்மித் மேடையில் ஏறி அவரை முகத்தில் அறைந்தார். பின்னர் தகாத வார்த்தை கூறி ரோக்கிடம் கத்தினார்.

1971 வன்முறைக்கு எதிராக போராட்டம்

1971 இல் பங்களாதேஷில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவத்தின் வன்முறைகளை எதிர்த்து டாக்காவில் கணிசமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பங்களாதேஷ் உணர்வுள்ள பிரஜைகள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் படுகொலைக்கு உள்ளானவர்கள் நினைவுகூரப்பட்டனர். இதில் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

பாகிஸ்தான் அரசு இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் குற்ற விசாரணை உடன் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.


சிறந்த திரைப்படமாக கோடா ஒஸ்கார் விருது

காது கேட்காத குடும்பம் ஒன்றில் காது கேட்கும் மகள் ஒருவரின் கதையைக் கூறும் “கோடா” என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாக ஒஸ்கார் விருதை வென்றுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒஸ்கார் விருது விழா நடைபெற்றது. இதில் ஒளிபரப்பு சேவை ஒன்றில் வெளியான திரைப்படம் ஒன்று மிகப்பெரிய விருதை வெல்வது இது முதல் முறையாகும். கோடா திரைப்படம் அப்பிள் டீவியில் வெளியானது. சிறந்த நடிகருக்கான விருதை, “கிங் ரிச்சர்ட்” என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை, “தி ஐஸ் ஒப் டாமி பயே” திரைப்படத்திற்காக, நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் வென்றுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங் (Julie Chung) தெரிவித்தார்.

ஜூலி சங் வுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று, (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை தூதுவர் பாராட்டினார்.

அண்மைக்காலமாக இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை விளக்கிய ஜனாதிபதி , சர்வதேச நாணய நிதியத்தை அணுகும் விடயத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டிய திருமதி ஜூலி சங் , இது நீண்டகால அடிப்படையில் இந்நாட்டுக்கு முக்கியமானதொன்றாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எந்தவித பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் மார்ட்டின் கெலீ (Martin Kelly), அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே (Susan Walke) ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

உலக நீர் விளையாட்டுகளின் தலைவரிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு

தேசிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், உலக நீர்வாழ் கூட்டமைப்பு தலைவர் கப்டன் ஹுசைன் அல் முசலாமுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

உலக நீர் விளையாட்டு சம்மேளனத்தின் (FINA) தலைவர் கப்டன் ஹுசைன் அல் முசலம் இலங்கையின் நீச்சல் வளர்ச்சிக்காக சர்வதேச மட்டத்தில் மூன்று சிறந்த பயிற்சியாளர்களை வழங்க சம்மதம் தெரிவித்தார்.

நீச்சலுக்காக அமெரிக்கப் பயிற்சியாளர் ஒருவரும், சீனாவில் இருந்து குதிப்பதற்கு மூன்று பயிற்சியாளர்களும், வாட்டர் போலோவுக்கு பல்கேரியாவிலிருந்து மூன்று பயிற்சியாளர்களும் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக முசலம் தெரிவித்தார்.

தேசிய ஒலிம்பிக் குழுவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள உலக நீர்வாழ் சங்கத்தின் தலைவர், வளர்ந்து வரும் இலங்கை நீச்சல் சம்பியன் மற்றும் சம்பியனுக்கு நான்கு வருட புலமைப்பரிசில்களை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இரண்டு புலமைப்பரிசில்களும் ஹங்கேரியில் வழங்கப்படும் என்றும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அனைத்து கல்வி வசதிகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை நீர்வாழ் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்காக சர்வதேச நீர்வாழ் சம்மேளனத்திடமிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கும் கப்டன் ஹுசைன் அல்-முசலம் ஒப்புக்கொண்டார்.

டைவிங் மையத்திற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்குவதாக உறுதியளித்த அவர், கட்டுமானத் தளம் இலங்கை நீர்வாழ் சங்கத்திற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.

சர்வதேச நீர் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஒலிம்பிக் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். சர்வதேச நீரியல் சம்மேளனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடினார். என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கப்டன் ஹுசைன் அல் முசலம், இலங்கை நீர்வாழ் சங்கம் தடை செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

நாங்கள் பல்வேறு காரணங்களுக்காக பல நாடுகளில் தடைகளை விதித்துள்ளோம். எனினும் உலக நீர்வாழ் சம்மேளனம் இலங்கைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

சர்வதேச மாநாட்டிற்கு ஏற்ற வகையில் விளையாட்டுச் சட்டம் திருத்தப்படவில்லை என்பதே இலங்கையின் பிரச்சினை. விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்தேன். எங்களுக்குள் மிகவும் வெற்றிகரமான விவாதம் நடந்தது.

அவர் விரைவில் விளையாட்டு சட்டத்தை புதுப்பிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றார் கேப்டன் ஹுசைன் அல் முசலம்.

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, பொருளாளர் காமினி ஜயசிங்க, இலங்கை நீரியல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த லியனகே, தற்போதைய தலைவர் நெத்ரு நாணயக்கார ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தனுஷ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19.45 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ள 14 வயதுடைய சிறுவன்


தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஷ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19.45 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் நீதிராஜன். அவரது மனைவி அனுசர. இவர்களது மகன் சினேகன் (வயது 14).

சிறுவன் சினேகன் 2019 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அதே போல் கர்நாடக மாநிலம் தொன்னுரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் முதல் இலங்கை தலைமன்னார் வரை நீந்தி கடந்து பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்திய- – இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் சிறுவன் சினேகன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (28) மதியம் 2 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து கடலில் நீந்த ஆரம்பித்து இரவு 09.55 மணிக்கு இலங்கை தலை மன்னாரை 7 மணி 55 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார். பின்னர் அங்கிருந்து நேற்று முந்தினம் இரவு 10.30க்கு புறப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (29) காலை 9.45க்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்தடைந்தார்.

சிறுவன் சினேகன் 19 மணி நேரம் 45 நிமிடத்தில் பாக் ஜலசந்தி கடலை இரு வழி நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்த் முதல் முறையாக தலைமன்னார் முதல் தனுஷ்கோடி மீண்டும் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

அவரை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த ரேஷன் அபே சுந்தர தலைமன்னார் முதல் தனுஷ்கோடி பின்னர் தலைமன்னார் வரை 28 மணி நேரம் 19 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சினேகன் முதன் முறையாக தனுஷ்கோடி முதல் தலைமன்னார் பின்னர் அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடி வரை இரு வழி நீந்தி கடக்க முயற்சி செய்து 19 மணி நேரம் 45 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடலில் நீந்தி வந்த சிறுவன் சினேகனை மண்டபம் கடலோர காவல்படை கமாண்டர் நாகேந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சிறுவனை வாழ்த்தினார்.

இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடல் பகுதியில் மெரைன் பொலிஸார் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கப்பலும் பாதுகாப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


அரச ஊழியர்கள் தாடியை மழிக்கக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்த நாடு 

ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர் தாடி வைப்பதற்கும் ஆடை ஒழுங்கை கடைப்பிடிக்கவும் தலிபான் அரசு அறிவுறுத்தி இருப்பதோடு இல்லாவிட்டால் பணியில் இருந்து நீக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் புதிய விதிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கு நல்லொழுக்கத்தை பரப்புவது மற்றும் தீமையை தடுக்கும் அமைச்சின் பிரதிநிதிகள் அரச அலுவலகங்களில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

அரச ஊழியர்கள் தாடியை மழிக்கக்கூடாது என்றும் தலைப்பாகையுடன உள்ளுர் ஆடையை அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் சரியான நேரத்தில் தொழுகையில் ஈடுபட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஆண் காவலர் இன்றி பெண்கள் விமானத்தில் பயணிப்பதற்கு தலிபான்கள் தடை விதித்ததோடு வாக்குறுதி அளித்தபடி பெண்கள் பாடசாலைகளை திறக்கவும் தவறியுள்ளனர்.


சேவல் சண்டையில் 19 பேர்  பலி

மெக்சிகோவில் சேவல் சண்டை விடுவதில் ஏற்பட்ட மோதல், அதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

அதிகாரத்திற்காக போட்டியிடும் இரு போதைக் கும்பலிடையே நடந்த ரகசிய சேவல் சண்டையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைக் கும்பல்கள் தங்களுக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் பெண்கள் உட்பட 19 பேர் கொல்லப்பாட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கண்மூடித்தனமாக சூடு நடத்திய துப்பாக்கிதாரிகள் கார்களில் தப்பிச் சென்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல்தாரிகளை முறியடிக்கும் முயற்சியில் அந்தப் பகுதிகளில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மெக்சிகோவில் போட்டி கும்பல்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சண்டைகள் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.


கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 150 ஆண்டு நிறைவு: நினைவு நாணயம் வெளியீடு

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக 20 ரூபா முகமதிப்பு கொண்ட புழக்கத்தில் உள்ள நிலையான நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. நிலையான நினைவு நாணயம் இலங்கையில் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படலாம்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களினால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிகா என். விஜயரத்னவின் பங்குபற்றுதலுடன் முதலாவது நாணயம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக்கழகம் அல்லது 'கொழும்பு மருத்துவக் கல்லூரி என அறியப்படும் இப்பீடம் 1870 இல் அப்போதைய கவர்னர் சேர் ஹெர்குல் ரொபின்சன் என்பவரால் நிறுவப்பட்டது. இலங்கையில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மருத்துவக் கல்வித் துறையில் ஒற்றை முன்னோடி மையமாக விளங்கிய தெற்காசியாவின் இரண்டாவது பழைமையான மருத்துவக் கல்லூரியாக இது விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானில் உலக வங்கி நிதிகள் இடை நிறுத்தம்

பாகிஸ்தானில் பெண்கள் சமயப் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மதநிந்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி சக பெண் ஆசிரியை மற்றும் இரு மாணவர்களால் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் வடமேற்கு கைபர் பக்துங்காவா மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சபூரா பீபி என்ற ஆசிரியையை பாடசாலையின் பிரதான வாயிலில் வைத்து சக ஆசிரியை மற்றும் இரு மாணவர்கள் கத்தி மற்றும் கம்புகளால் தாக்கி இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்” என்று பொலிஸ் அதிகாரி சாகிர் அஹமது ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இதில் பிரதான சந்தேக நபரான சக ஆசிரியர் தமது மருமகள்களான இரு மாணவிகளுடன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

அந்த ஆசிரியை இறைத்தூதருக்கு எதிராக மதநிந்தனையில் ஈடுபட்டதாக இரு மாணவிகளும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தனிப்பட்ட பகை உள்ளதா என்பது பற்றி பிரதான சந்தேக நபரான உம்ரா அமானிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடைநிலை பாடசாலைகளுக்கு பெண்கள் திரும்புவதற்கு தலிபான்கள் தடை விதித்ததை அடுத்து ஆப்கானிஸ்தானில் 600 மில்லியன் டொலர் பெறுமதியான நான்கு திட்டங்களை உலக வங்கி இடை நிறுத்தியுள்ளது.

நாட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவது உட்பட நான்கு திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

தமது உதவிகளில் பெண்களும் பங்கேற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் நாம் அவதானம் செலுத்தி உள்ளோம் என்று உலக வங்கி முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.

பல மாதங்கள் நீடித்த கட்டுப்பாட்டைத் தொடர்ந்து பெண்கள் பாடசாலைக்கு திரும்ப அனுமதி அளித்த தலிபான்கள் அந்த முடிவை கடந்த வாரம் திரும்பப் பெற்றனர்.

ஷரியா சட்டம் மற்றும் ஆப்கான் பாரம்பரியத்துக்கு அமைய மாணவிகளின் சீருடையை தயாரிப்பது பற்றி முடிவு ஒன்று எடுக்கப்பட்ட பின் மாத்திரமே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தலிபான்கள் குறிப்பிட்டனர்.

தலிபான்களின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டம் வெளியாகியுள்ளது.

மகளிர் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு தன்னம்பிக்கை முதலில் அவசியம்

1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நியூயோர்க் நகரில் நடந்த பேரணிக்குப் பின்னர் 1909 ஆம் ஆண்டு அந்த தினத்தை அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது. அதன் பின்னர் 1910 ஆம் ஆண்டு கோபன் ஹெகனில் நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் மார்ச் 8 ஆம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக அனுசரிக்க வேண்டுமென்ற யோசனையை 'கிளாரா ஜெட்கின்' முன்வைத்தார்.

1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மார்ச் 8 ஆம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

பெண்கள் பலவீனமானவர்கள் அல்லர். அவர்கள் பலசாலிகள். மிக நுணுக்கமான நிர்வாகிகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். தன் மகள் சுதந்திரமாக வாழ வேண்டுமென நினைக்கும் பெற்றோர் பலர், தன் மகனின் மனைவியை நிம்மதியாக வாழ விடுவதில்லை. எத்தனை அறிவும் தெளிவும் திறமையும் இருந்தாலும் பெண்கள் பலர் வீட்டிலேயே முடக்கப்படுகின்றனர்.

பெண்களினால் எதையும் சாதிக்க முடியும். மிகச் சிறந்த படைப்பாளிகள் பெண்கள்தான். பெண்களே... உங்களை நீங்களே கட்டமைத்துக் கொள்ளுங்கள். கூர்மையான சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். தெளிவாக, ஆழமாக கற்றுக் கொள்ளுங்கள், உயர்வான எண்ணங்களை நினைவில் வையுங்கள்.

பயம் என்பதை எப்போதும் அவர்கள் மனதில் விதைக்காதீர்கள். யாரையும் சார்ந்து வாழ அவளை வற்புறுத்தாதீர்கள். வாழ்க்கைக்கான தகுதியை சொல்லிக் கொடுங்கள். தன்னம்பிக்கை, குறிக்கோள், திட்டமிடல் இன்றி வாழ்ந்து விட முடியாது.

விழும் போதெல்லாம் 'எழு' என சொல்லி கொடுங்கள். அப்போது நீங்கள் உங்கள் பெண்ணுக்கு சொத்து சேர்த்து வைக்க தேவையில்லை. எல்லா சவால்களையும் தாண்டி அவள் சாதித்துக் கொண்டே இருப்பாள்.

எனவேதான் பெற்றோர்களே... உங்களின் பெண்பிள்ளைகளுக்கும் நிர்வாகம், தைரியம், நம்பிக்கை, பேச்சாற்றல், கல்வி என எல்லாவற்றையும் சிறு வயதிலிருந்தே கொடுங்கள்.

நேரிய எண்ணங்களுடன் உங்களின் இலக்கை நோக்கி செல்கின்ற போது அது உங்களின் கையில் கிடைக்கும். நாம் என்னவாக வேண்டுமென்று எண்ணுகின்றோமோ அதுவாகவே ஆகின்றோம். யார் யாரையும் சாராதவர்களாக, யாரும் நிகரில் சாராதவர்களாக, வாழ்வோம், சாதிப்போம் என்ற இலட்சியம் பெண்களுக்கு அவசியம்.

பெண்களே... நேற்றைய தலைமுறை கடந்ததாகவே இருக்கட்டும். இன்றைய தலைமுறையில் பதனிடுவோம். நாளைய தலைமுறை தன்னம்பிக்கையோடு கண்விழிக்கட்டும்.

பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் ஆதியில் இருந்தே நடந்தவண்ணம் இருக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டில் பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு இடங்களிலும் பெண்களுக்கான உரிமைப் போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post